அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட அதிகாரம் அரசுக்கு உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்று அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை முறைப்படுத்த வேண்டியுள்ளது. அதுவரை அந்தப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து அந்தப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி அரசின் உத்தரவுக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி. வில்சன் கூறியது: அரசின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் சம்பளம் போன்றவற்றை அரசு வழங்குகிறது. அங்கு நடைபெறும் ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் தலையிட அரசுக்கு உரிமை உள்ளது. அந்தப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த அந்தப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அதிகாரம் உள்ளது. எனவே, இது போன்ற சுற்றறிக்கைகளை அனுப்ப அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது:
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த அந்தப் பள்ளிகளுக்கு அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, அரசு தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக