தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.8.11

சமச்சீர்கல்வி அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? : முதல்வர்

சமச்சீர்கல்வி அமல்படுத்திய பின் அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? குறை கூறியவர்களிடம் முதல்வர் ஆவேசம்
 
"அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி நாங்கள் கூறிய போது, யாருமே கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக, திட்டம் அமல்படுத்திய பின், இப்போது பல்வேறு குறைகளைக் கூறி அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?'' என்று, சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டிய உறுப்பினர்களிடம், முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:

பீம்ராவ்-மார்க்சிஸ்ட்: பட்ஜெட்டில், கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 4.25 சதவீதமாக உள்ளது. இதை, 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக 109 பரிந்துரைகளை, முத்துக்குமரன் குழு, முந்தைய அரசுக்கு பரிந்துரைத்தது. அதில், ஒருசில பரிந்துரைகளை மட்டுமே தி.மு.க., அரசு ஏற்றுள்ளது. அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சண்முகம்: "சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்' என்று, முதல்வர் கூறினார். ஆனால், இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று, உங்களது கட்சியைச் சார்ந்தவர்களும், மற்றவர்களும் கோர்ட்டுக்கு சென்றனர். அதன் காரணமாக, இன்று திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீம்ராவ்: முந்தைய அரசில், துணைவேந்தர் பணியிடங்கள் பணத்திற்கு விற்கப்பட்டன. ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்தார் என்பதற்காகவே, சபாபதி மோகனுக்கு துணைவேந்தர் பதவியை வழங்கினர். உயர்கல்வியில் பெரும் ஊழல் நடந்தது. அதுகுறித்து விசாரிக்க, தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில் ஏ.பி.எல்., திட்டம் அமலில் இருக்கிறது. இப்போது, சமச்சீர் கல்வித் திட்டம் வந்துள்ளதால், எந்த திட்டத்தை அமல்படுத்துவது என்பதில் குழப்பம் இருக்கிறது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பாட அட்டைகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் திட்டம் (ஆக்டிவ் பேஸ்டு லேர்னிங்-ஏ.பி.எல்.,) இருக்கிறது. பாடத்திட்டம் சார்ந்த கார்டுகளை அச்சடித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் வகுப்பிற்கு கார்டுகளை அச்சடித்து விட்டனர். இதர வகுப்புகளுக்கு கார்டுகளை அச்சடிக்காமல், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மட்டும் நடவடிக்கை எடுத்தனர். பழைய பாடத் திட்டத்தின் கீழ் கார்டுகளை அச்சடித்ததில், 32 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

குரு - பா.ம.க.,: சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: இவர்களது கொள்கை, நிமிடத்திற்கு நிமிடம் மாறும்போல் இருக்கிறது. அரைவேக்காடான சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது. தரத்தை உயர்த்த கால அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு அமல்படுத்துகிறோம் என்று கூறினோம். கம்யூனிஸ்ட், பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அதன் தலைவர்களும் கேட்கவில்லை. இருக்கின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்துங்கள் என குரல் கொடுத்தனர். திட்டத்தை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இப்போது திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இப்போது, பாடப்புத்தகம் சரியில்லை; சரி செய்யுங்கள் என அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி? 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வீணடிப்பதா என்று, பலர் கேள்வி கேட்டனர்.
பாடப் புத்தகங்களின் தரத்தைப் பற்றி பத்திரிகைகளில் தினமும் செய்தி வருகிறது. காமராஜர் மறைந்த தேதியை தவறாகத் தந்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தேதியை தவறாக அச்சிட்டுள்ளனர். இந்த லட்சணத்தில் பாடப் புத்தகங்கள் இருந்தால், மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்களோ என கவலையாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்