சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டாலும், 15ம் தேதிக்குப் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
சென்னை உட்பட, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. பள்ளி சார்பாக ஆசிரியர்கள், பிரதிநிதிகள் தங்களது பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களை, வாங்கிச் சென்றனர். பள்ளிகளுக்கு புத்தகம் சென்றடைந்தாலும், மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பின்னரே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கு காரணம், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள் உட்பட, பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, ஒன்று முதல் 6ம் வகுப்பு பாடப் புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள், ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டது. இதற்கு பல லட்சம் ரூபாய் செலவானது.
இந்நிலையில், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 9 கோடி புத்தகங்கள் உள்ளன. இவற்றில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் குறித்த தகவல்களை லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மறைப்பதா அல்லது அந்த பக்கங்களை அகற்றி வழங்குவதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆலோசனைக்குப் பின், 15ம் தேதிக்குப் பின்னர் தான் மாணவர்கள் கைகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் சேரும்.
அதுவரை, அவர்கள் காத்திருக்க வேண்டியது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக