தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. அதேநேரத்தில், புத்தகங்களை விநியோகிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.இதுவரை மொத்தம் 70 சதவீதப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
சமச்சீர் கல்வியை 10 நாள்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கிடங்குகள், கல்வி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்தப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்தப் பகுதிகளை நீக்கும் பணிகள் அந்தந்தப் பள்ளிகளில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தன.
இந்தப் பணிகள் குறித்து தலைமையாசிரியர்கள் கூறியது:
சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு எடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விநியோகிக்கப்பட்டது. பல்வேறு வகுப்புகளுக்கான புத்தகங்கள் இன்னும் வரவேண்டியுள்ளது. புத்தகங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளும் தொடர்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 90 சதவீத சமச்சீர் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அச்சடித்தல், பைன்டிங் செய்தல், கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் புத்தகங்கள் தயாராகி வருகின்றன. புத்தகங்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு புத்தகங்கள் இல்லை:
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்புகளைத் தவிர்த்து பெரும்பாலான வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வட்டார அலுவலகங்களில் சமச்சீர் பாடப்புத்தகங்களை வாங்குவதற்கு காசோலைகளுடன் தனியார் பள்ளி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை திரண்டனர். அனைத்துப் புத்தகங்களுக்கும் பள்ளி நிர்வாகிகள் காசோலைகளைச் செலுத்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு உள்ளிட்ட ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தயாராகி வருவதாகவும், புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்க ஒரு சில நாள்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக