தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.7.12

பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிகளை வரையறுக்க, ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமனம்

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க புதிய விதிகளை வரையறுக்க, போக்குவரத்து இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகில், கடந்த இரு தினங்களுக்கு முன், சீயோன் பள்ளி பேருந்திற்குள் இருந்த, ஓட்டை வழியாக இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, 7, கீழே விழுந்தாள். அதில், பின் சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பலியானாள். இந்த சம்பவத்தில், பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

ஐந்து பேர் கைது: இது தொடர்பாக, ஸ்ருதி படித்த பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், அந்த பஸ்சிற்கு கடந்த 20 தினங்களுக்கு முன் தகுதிச் சான்று வழங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனுடன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பட்டப்பச்சாமியும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஐகோர்ட் உத்தரவு
: இது குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச், தானே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பள்ளி கல்விச் செயலர் சபீதா, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவ் தலைமையில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முடிவில், "பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழு அமைப்பு: இந்த உத்தரவைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையின் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிகளை வரையறுப்பதற்கான குழுவை அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில், போக்குவரத்துத் துறை விதிகள் பிரிவு இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், போக்குவரத்து துணை கமிஷனர் (திருநெல்வேலி) பாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சென்னை கிழக்கு) பாஸ்கரன், மாநில போக்குவரத்துக் குழும உதவி செயலர் பாஸ்கரன், அதே குழுமத்தின் அலுவலர் லட்சுமிபதி, பூந்தமல்லி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


விரைவில் புதிய விதிகள்
: இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழு, பள்ளி வாகனங்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய விதிகளை உருவாக்குவர். இதில், பள்ளி வாகனங்களின் ஆயுட்காலம், ஓட்டுனர்கள் தகுதி, வாகனங்களின் பராமரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் விதிகள் தொடர்பாகவும் பிரதான மாற்றங்கள் இருக்கும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவிடம், இக்குழுவினர் அளிப்பர். அதன் பின்னர் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். பின்னர், வரைவு விதிகள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதிகள் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்