"மலைப்பகுதியான வால்பாறை தொகுதியில் புலி, யானை தாக்குதல்கள் உள்ளதால், தேர்தல் பணி ஏற்பதில் அரசு அலுவலர்கள் தயங்குகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் பலர், பல்வேறு இயலாமைகளை சுட்டிக்காட்டி, தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பணி ஒதுக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிபுரிந்தாக வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களில் சிலர், மலைப்பகுதிகளில் பணிபுரிய தயங்குகின்றனர். குறிப்பாக, வால்பாறை மலைப்பகுதிகளில் புலி, யானை தாக்குதல் பிரச்னைகள் இருப்பதாலும், மலைகளில் சுமைகளை சுமந்து செல்ல வேண்டியதில் உள்ள சிரமம் காரணமாகவும் பெண் ஊழியர்கள் பலர், தங்களுக்கு வேறு தொகுதிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் அல்லது பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, "வால்பாறை தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியாளர்கள், அங்குள்ள மலைப்பகுதிகளில் பணிபுரிய வேண்டியதில்லை' என கலெக்டர் அறிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் உமாநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும், அவர்கள் பணிபுரிய வேண்டிய சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டு, ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி ஒதுக்கீடு முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மாறுதல் குறித்த எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்பட மாட்டாது. வால்பாறை தொகுதியில் ஒதுக்கப்பட்ட அலுவலர்கள், மலைப்பகுதியில் பணிபுரிய வேண்டியதில்லை. மாறாக, கோட்டூர், ஆனைமலை சமவெளிப் பகுதிகளில் மட்டும் பணிபுரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, அங்குள்ள அலுவலர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு உமாநாத் கூறியுள்ளார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக