தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.4.11

தாமதங்களை தவிர்க்க "டிரை ரன்' திட்டம். ஓட்டுச் சாவடிகளில் புதிய அறிமுகம்

ஓட்டுச் சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்களை சரியான நேரத்திற்கு கொண்டு போய் சேர்க்கவும், பாதுகாப்பு வீரர்கள் விரைந்து வரவும் வசதியாக, "டிரை ரன்' என்ற சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதே போன்ற ஒரு சோதனை ஓட்டத்தை, வரும் 11ம் தேதியன்றும் நடத்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன், அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் 54 ஆயிரத்து 63 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப் பதிவிற்கான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள், மை உள்ளிட்ட சாதனங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் நாள் நெருங்குவதை முன்னிட்டு, ஓட்டுப் பதிவிற்கு தேவையான பொருட்கள் ஒவ்வொரு தொகுதியிலும், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப் பதிவிற்கு முதல் நாள் இந்த பொருட்கள் ஒவ்வொரு ஓட்டுச் சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். கடந்த தேர்தல்களின் போது, இந்த பொருட்களை குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு, பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும், ஓட்டுச்சாவடிக்கும் இடையிலான வழித்தடத்தை கண்டறிவதில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்று தெரிய வந்தது. இதன் அடிப்படையில், தாமதத்தை தவிர்க்க இந்த தேர்தலில் ஒரு புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் இருந்தும், தேர்தல் பணியாளர்கள், போலீசார், அதிகாரிகள் ஆகியோர் ஓட்டுப் பதிவிற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு வாகனங்கள் மூலம் ஒரு சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனை ஓட்டம், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், ஓட்டுச் சாவடிகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.

இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரை கேட்டபோது கூறியதாவது:
பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "டிரை ரன்' எனப்படும் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 7ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, வரும் 11ம் தேதியும் இதே போல் ஒரு சோதனை ஓட்டத்தை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தேர்தலில், பல்வேறு இடங்களில் இருந்து வந்த புதியவர்கள் பணியில் உள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த போலீசார், அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்வது குறித்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் அவை தெளிவாகும். அதே போல், பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு ஓட்டுச் சாவடிக்கு செல்ல எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதும் தெரிய வரும். 

மேலும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால், கூடுதல் போலீசார் குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு வரவேண்டும். வேறு இடங்களில் இருந்து வந்து, ஒரு இடத்தில் தங்கியுள்ள போலீசாருக்கு, எந்த ஓட்டுச் சாவடி, எங்கு இருக்கிறது என்று தெரியாது. இந்த சோதனை ஓட்டம் மூலம், ஓட்டு சாவடிகள் இருப்பிடம் அறிந்து போலீசார் விரைந்து வர முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்