தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்து நான்கு மாதங்கள்ஆகியும் மதிப்பூதியம் வழங்காததால் ஊழியர்கள் வேதனையில் உள்ளனர்.
தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணி நடந்தது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பணி முடிந்தது. அதனுடன் தேசிய அடையாள அட்டைக்கான பணிக்கும் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொறுப்பாளர், அவருக்கு கீழ் 3 கூடுதல் பொறுப்பாளர்கள், அவர்களுக்கு கீழ் பயிற்சியாளர்கள், அவர்களுக்கு கீழ் கணக்கெடுப்பாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டனர்.
கணக்கெடுப்பாளர்களை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆசிரியர்களே பணியாற்றினர். படிவத்தை வீடுவீடாகக் கொண்டு சென்று கணக்கெடுத்தனர். ஜூலை மத்தியில் பணி முடிந்தாலும், படிவங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மத்தியில்தான் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணி முடிந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா நடக்கவில்லை.
இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு வீட்டுப் பட்டியலுக்காக 3250 ரூபாயும், தேசிய அடையாள அட்டை பணிக்காக 3000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும். இதனால் ஆசியர்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர். ""தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இப்பணிக்காக கணக்கெடுப்பு நடத்தும்போது பல சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினோம். இதுவரை சம்பளமில்லை. இன்னும் சில மாதங்களிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது'' என்றனர்.
மாவட்ட அளவில் ஸ்டேஷனரி மற்றும் விளம்பரம் குறித்த செலவினங்களுக்காக மட்டும் சில ஆயிரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக நியமிக்கப் பட்ட சில அமைச்சுப்பணியாளர் களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது. மற்றபடி யாருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக சென்னையில் விசாரித்தபோது, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு அனுப்பப்பட்ட படிவங்களை சரி பார்க்கும் பணி முடிந்தபின்தான் பணப்பட்டுவாடா நடக்கும் என தெரிவித்தனர். தற்போது வீட்டுப்பட்டியலை புத்தகமாக தயாரிக்கும் பணி, (சுருக்கம் தயாரிக்கும் பணி) நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு முன் பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக