தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.10.10

ஒரே பணி; இரு வேறு ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி நிலைக்கு உட்படுத்தப்படுவார்களா?


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் பணிபுரியும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உள்படுத்தப்படுவர் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி 3 ஆண்டுகளாகியும் அமலாகவில்லை. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்று பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், 27.6.2003-ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் 2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், இந்த ஆசிரியர்கள் 1.6.2006 முதல் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியவிகிதத்தில் பணியாற்றுகிறார்கள்.

இவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பி.ஏ. தமிழ், பி.லிட். முடித்து தமிழாசிரியர் தகுதியுடனும், பி.ஏ., பி.எஸ்.சி., எம்.காம், எம்.ஏ. பட்டத்துடன் பி.எட். படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடனும் உள்ளனர். 15 சதவிகிதம் பேர் ஏதேனும் ஒரு பட்ட அல்லது பட்டமேற்படிப்பு முடித்துள்ளனர். 5 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளாதவர்களாக உள்ளனர்.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகிறார்கள். இதனால் ஒரே பணி; இருவேறு ஊதிய விகிதம் என்ற அவல நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஏற்கெனவே 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து ஒரு தீர்வை அளித்த பின்னரே பட்டதாரி ஆசிரியர்களை அப்பணியிடங்களில் நியமித்திருக்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
24.11.2007-ல் சென்னையில் 8 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்ற கல்வி மாநாட்டில் பங்கேற்ற மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசி, பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால், அந்த உறுதிமொழி 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வி.எல். சேம் பிரின்ஸ்குமார்.
 
29.7.2007 அன்று வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றிய தொழிற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியவிகிதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல், 4.10.2006-ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் நியமித்திருந்த கணினி ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல், பல்வேறு முன்உதாரணங்களையும் கூறமுடியும். அதன்படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்திற்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
 
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தற்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அதே பாடங்களையே மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு பதவி உயர்வு, மற்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. 2002-ம் ஆண்டு முதல் இன்று வரை இடைநிலை ஆசிரியர்கள் நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.    
 
இடைநிலை ஆசிரியர்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால் பல ஆண்டுகளாக பதவி, ஊதிய உயர்வு இல்லாமல் ஒரே இடத்தில் பணியாற்றும் நிலையும் தொடர்கிறது.   
 
அரசு தங்களுக்கு வழங்கியிருந்த உறுதிமொழி நிறைவேறும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரின் கல்விமானியக் கோரிக்கையின்போது இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு  மிஞ்சியது ஏமாற்றமே!

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்