அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதித் தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த விவரங்கள் பட்டியலாகத் தயாரிக்கப்படும். ஊழியர்களின் சம்பளப் பட்டியலை அரசுத் துறைகள் மற்றும் பள்ளிகளின் தலைவர்கள் தயாரித்து கருவூலத் துறைக்கு அனுப்பி வைப்பர். கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படும். சம்பளம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அதற்கான படிவத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அரசு ஊழியர்கள் கையெழுத்திட்டு வந்தனர்.
புதிய உத்தரவு: இப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் மூலம் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. அனைவரும் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சம்பளத்தை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுப்படி, ஸ்டாம்ப் ஒட்டி படிவத்தில் கையெழுத்துப் போடத் தேவையில்லை எனவும், ஒவ்வொரு மாதமும் சம்பளம் பெற்றுக் கொண்டதற்கான விவரங்கள், எவ்வளவு சம்பளம் போடப்பட்டது என்பது போன்ற தகவல்களை கருவூலத் துறையிடம் வழங்கும் பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. ஆனால், இந்த உத்தரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டக் கருவூலங்களில் பின்பற்றப்படவில்லை என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பளப் பட்டியல் இல்லை: இதுகுறித்து, அவர்கள் கூறியது: சம்பளப் பட்டியலை கருவூலத் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு கூறுகிறது. ஆனால், இந்தப் பட்டியலைத் தருவதற்கு கருவூலத் துறை மறுக்கிறது. மாவட்டக் கருவூலங்களில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலைத் தனியாக தயாரித்து வழங்க முடி யாது என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டது என்கிற விவரம் பட்டியல் கிடைத்தால்தான் தெரியும். ஆனால், அதைத் தர கருவூலத் துறை மறுக்கிறது என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
குழப்பம் எழ வாய்ப்பு: பயணப்படி போன்ற படிகளை வங்கி மூலம் எடுக்கும்போது சில சமயம் ஏற்கெனவே உள்ள சம்பளப் பணத்துடன் அது சேர வாய்ப்பு இருக்கிறது. இதனால், எவ்வளவு பணம் பயணப்படியாக வழங்கப்பட்டது என்கிற விவரம் தெரியாமல் போகலாம் என்று ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால், குழப்பங்கள் எழுவதோடு, கருவூலத் துறை ஊழியர்கள் செய்யும் தவறுகளும் மறைக்கப்பட்டு விடும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். எனவே, சம்பளப் பட்டியலை கருவூலத் துறை வழங்குவதற்கு அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பு.
அரசாணை எண்: 175 நாள்: 18-06-2010
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக