தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.3.12

பிப்ர"வரி' வந்தாலே சம்பளதாரருக்கு ஜுரம்: அரசியல்வாதிகளின் கணக்கோ வேறு மாதிரி


கட்சி வித்தியாசமின்றி, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் வருமான வரி கணக்கு தாக்கலின் போது, உரிய வகையில் வரி செலுத்துவதில்லை.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது வருமானத்துக்கு ஏற்ப, ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டும். இதில், பெரும்பாலும் சரியாக வருமான வரி செலுத்துபவர்கள், மாதாந்திர சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் தான். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வந்துவிட்டால், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்றோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பரபரப்பாக இருப்பர். எப்படியாவது வரியை குறைக்கணுமே, என்ன செய்யலாம். இதுல முதலீடு செய்யலாமா, போஸ்ட் ஆபீசில் போடலாமா, பிக்சட் டெபாசிட்டா பேங்கில் போடலாமா என பரபரப்பாக இருப்பர். ஆனால், எதிலும் கமிஷன் பார்க்கும் அரசியல்வாதிகளோ, அது பற்றி கவலை எதுவும் பட்டதாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு ஆளுங்கட்சி எம்.பி.,க்களாக இருந்தால், நாங்க வரப்போற நிதியாண்டுல வருமான வரி விலக்கு குறைக்கப்போறோம் என, பிரசாரம் பண்ணிக் கொண்டு இருப்பர்.

எதிர்க்கட்சியினரோ அதற்கு மேலே ஒரு தொகையைச் சொல்லி, வருமான வரி விலக்கு தொகையை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைப்பர். அப்படியே வருமான வரி கட்டணும் என்ற நிலை வந்தாலும், தங்களிடம் ஏதாவது காரியத்துக்கு அணுகும் நபர்களின் தலையில் கட்டிவிடுவது, "கை' வந்த கலையாக இருக்கும். தங்கள் சொந்த காசிலிலிருந்து வருமான வரி கட்டியிருந்தால், அதன் வலி தெரியும். வரி கட்டுவதில்லை... அப்படி கட்டினால், அவருக்காக யாரோ கட்டியிருக்கிறார் என அர்த்தம். விலக்குன்னு அவங்க பிரசாரம் செய்தாலே, வரி கட்டாம விலகியிருக்கிறதை தான் அப்படி சொல்றாங்க என்று நினைக்கத் தோணுது!

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு வருமான வரியைப் பற்றி கவலைப்படுவதில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களது வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமென வலியுறுத்தி, தகவல் உரிமை சட்ட ஆர்வலர் கோபாலகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், சில எம்.பி.,க்கள் பற்றிய விவரங்களையும் விரைவில் சேர்க்க உள்ளனர். வருமான வரி கணக்கு காட்டுவதில் எம்.பி.,க்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்க்கலாம். கடந்த 2009 லோக்சபா தேர்தலின் போது, சில எம்.பி.,க்கள் காட்டிய கணக்கின் அடிப்படையில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை, எம்.பி.,க்களின் ஆண்டு சம்பளம், 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். இந்த தொகைக்கு இவர்கள் குறைந்தபட்சமாக 18 ஆயிரத்து 200 ரூபாய் முதல், 28 ஆயிரத்து 200 ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டும். அவ்வாறு தான் மற்ற ஊழியர்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை தனக்கு, "பான்' எண் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பா.ம.க., எம்.பி.,யாக இருந்த தன்ராஜ், தான் 35 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் கே.வி.ராமலிங்கம், கடந்த 2010 ஜூன் 30ம் தேதி ராஜ்யசபா எம்.பி., ஆனார். இவர் 2011 மே 20ம் தேதி, பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் போது இவர் தாக்கல் செய்த கணக்கில், தனக்கு விவசாய வருமானம் மட்டுமே உள்ளதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் எம்.பி.,யாக இருந்த பெல்லார்மின், தனக்கு 2008-09ம் ஆண்டுக்கு, 4,160 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும், 2009-10ம் ஆண்டுக்கு அட்வான்ஸ் வரியாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சராக 1996 முதல் 2009ம் ஆண்டு வரை இருந்து வந்துள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவோ, தான் வருமான வரி சர்சார்ஜ் ஆக, 2008-09ம் ஆண்டுக்கு 7,583 ரூபாய் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவோ, சர்சார்ஜ் உட்பட வருமான வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த கார்வேந்தன், 2008-09ம் ஆண்டுக்கு, 15 ஆயிரத்து 840 ரூபாய் வருமான வரி செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் இவர்கள், இப்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்களாம். ஆனால், சாதாரண குடிமகன்கள் மட்டும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வரி கட்ட வேண்டுமாம். வருமான வரி மட்டுமன்றி, தொழில் வரி உட்பட பல்வேறு வரிகளை சாதாரண மக்கள் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்