தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.3.12

கல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி மட்டுமே வேலைக்காக பரிசீலிக்கப்படும் - ஐகோர்ட்

"கல்விச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியை மட்டுமே, பணியில் சேரும் போது பரிசீலிக்க வேண்டும். அதன்பின் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள குமாரபெருமாள் பண்ணை அறிவியல் மையத்தில், உதவிப் பேராசிரியராக, டாக்டர் ஆறுமுகம் என்பவர், 1984ம் ஆண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார். எஸ்.எஸ்.எல்.சி., புத்தகத்தில், இவரது பிறந்த தேதி, 1952ம் ஆண்டு, ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டது. பணியில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின், தனது பிறந்த தேதி, 1953ம் ஆண்டு, ஏப்ரல் 12 என குறிப்பிட்டு, அதற்கு ஆதாரமாக, களக்காட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழை சமர்ப்பித்தார்.
 

சில விளக்கங்கள் கேட்டு, அந்த விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது. கடைசியில், பிறந்த தேதியில் மாற்றம் கோரிய விண்ணப்பத்தை, கோவையில் உள்ள வேளாண் பல்கலையின் பதிவாளர் நிராகரித்தார். 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். வேளாண் பல்கலை சார்பில், வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜரானார். 


நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

கல்விச் சான்றிதழ்படி பார்த்தால், 1970ம் ஆண்டில், 18 வயதை மனுதாரர் அடைகிறார். வேலையில் இவர் சேரும் போது, "மைனர்' அல்ல. 18 வயதை எட்டிய பின், மேலும் 19 ஆண்டுகள் கழித்து, அதாவது 37வது வயதில், பிறந்த தேதியில் மாற்றம் கோருகிறார். கால தாமதம் என்கிற முகாந்திரத்தின்படி, இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.


பணியில் சேரும்போதாவது, மனுதாரர் முறையான கவனத்துடன், சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது, ஆவணங்களில் பிறந்த தேதியை மாற்ற, எந்த முயற்சியும் எடுக்காமல், பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின், பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என, மனுதாரர் நினைத்துள்ளார்.


களக்காட்டில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, தனது பிறந்த தேதி சான்றிதழை கொண்டு வர முடியும் போது, அவரின் இளைய சகோதரியின் பிறந்த தேதி சான்றிதழையும் கொண்டு வருவதில் எந்த தடங்கலும் இருக்காது. ஆனால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை என மனுதாரர் கூறியுள்ளார். இது, சந்தேகமாக உள்ளது.

பணி நீட்டிப்புக்காக மாற்றம் கோருவதா?


பள்ளிச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை வைத்து, பலன் அடைந்து விட்டு, பிற்காலத்தில் பணி நீட்டிப்பு பெறலாம் என்கிற ரீதியில், பிறந்த தேதியில் மாற்றம் கோருவது சரியல்ல. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, வேலைக்காக தமிழகத்தில் லட்சக்கணக்கில் உள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, பிறந்த தேதியில் மாற்றம் கொண்டு வந்து, பணி காலத்தை நீட்டிப்பதில் நியாயமில்லை. இது, பொது நலனுக்கு எதிரானது.


தமிழ்நாடு பணி விதி, 49ன்படி, பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குள், பிறந்த தேதியில் மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என உள்ளது. இந்த விதி, அரசு ஊழியர்களை தேவையின்றி ஊக்குவிப்பது போல உள்ளது.
இந்த விதியில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதேபோன்று, மாநில நீதித்துறை பணி விதிகள், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி ஊழியர்களின் பணி விதிகளிலும், திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தவறான பிறந்த தேதியாக இருந்தால், அந்த நபர், 18 வயதை அடைந்த பின், மூன்று ஆண்டுகளுக்குள் தவறான பிறந்த தேதியை திருத்திக் கொள்ளும் வகையில், தகுந்த பிரிவை சட்டத்தில் கொண்டு வர, சம்பந்தப்பட்ட அரசு பரிசீலிக்கலாம்.


தேர்வுக்கான அறிவிப்பாணையில், கல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி மட்டுமே வேலைக்காக பரிசீலிக்கப்படும் என்றும், ஓய்வுபெறும் வரை பிறந்த தேதியில் மாற்றம் செய்யப்படாது என்றும், மத்திய, மாநில அரசுகள், நிறுவனங்கள் தெளிவுபடுத்தி விட வேண்டும். அப்போது தான், அரசு ஊழியர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைப்பது போலாகும். 


இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.


நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்