தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.1.12

பள்ளிக் கல்வித்துறை இணையதளம் முடங்கியது :ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் சிக்கல்

பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால், ஒரு வாரமாக முடங்கி உள்ளது. 

முந்தைய தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வித்துறைக்கென தனி இணையதளம் (www.pallikalvi.in) உருவாக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, "மார்க் மெக்லிங் சொல்யூஷன்' நிறுவனம், இணையதளத்தை வடிவமைத்தது. 

நல்ல வரவேற்பு
இணையதளத்தை இந்நிறுவனமும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகமும் சேர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு, மே 2009ல், செயல்பாட்டுக்கு வந்தது. பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வித்துறை அலுவலகங்களும், பள்ளிக்கல்வி இணையதளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசாணை, ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை, ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவு என, பல்வேறு தகவல்கள், இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் இந்த இணையதளம், மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. 

ஒப்பந்தம் முடிவு
இணையதளத்தில் விளம்பரம் மூலம் வரும் வருவாயை, மார்க் நிறுவனமும், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகமும் பிரித்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு விளம்பரம் வரவில்லை. அரசுத் தரப்பில் இருந்து, போதிய ஆதரவு இல்லாததால், நிறுவனம் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நிறுவனத்துடனான அரசின் ஒப்பந்தம், கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஒரு வாரமாக இணையதளம் முடங்கியுள்ளது. 

ரூ.50 லட்சம் நஷ்டம்
இதுகுறித்து, நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: 
முதல் இரண்டு ஆண்டுகள், விளம்பரத்தின் மூலம் வந்த வருவாயில், இணையதளத்தை நடத்தி வந்தோம். ஆனாலும், சொல்லும்படி வருவாய் கிடையாது. தேர்வு முடிவுகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வரும்போது, அதிகமான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப, கூடுதல், "நெட்வொர்க்' ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக, "நெட் 4 இந்தியா' என்ற நிறுவனத்திற்கு, 6 லட்ச ரூபாய் வரை கட்டணம் கொடுத்து, கூடுதல் வசதிகளை பெறுகிறோம்.மாதந்தோறும் குறைந்தபட்சம், 1.50 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளையும் செய்ய வேண்டும். எங்களால் சமாளிக்க முடியாமல் திணறி வந்தோம். இதுவரை, 50 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 19ம் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகளைச் சந்தித்து பேசினோம். இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. "இணையதளத்தை நடத்துவதற்கான செலவை மட்டுமாவது கொடுங்கள் போதும்' என்று தான் கேட்கிறோம்; ஆனாலும், எந்தவித பதிலும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
"எனக்கு எதுவும் தெரியாது'

பெற்றோர் ஆசிரியர் கழக செயலரும், இணையதள நிர்வாகத்திற்கான பொறுப்பாளருமான (துணை இயக்குனர்) கலைச்செல்வனிடம், இதுகுறித்து கேட்டபோது: இணையதளம் முடங்கி இருப்பது குறித்தும், ஒப்பந்த தேதி முடிந்ததும், எனக்குத் தெரியாது. இணையதள நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்கவில்லை. இணையதளம் செயல்படாமல் இருப்பது குறித்து விசாரிக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்