தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.9.11

நிரந்தர தலைமை இல்லாமல் திண்டாடும் பள்ளிக் கல்வித் துறை: துறை ரீதியிலான பணிகள் தேக்கம்


பள்ளிக் கல்வித் துறைக்கென, தனி இயக்குனரை நியமிக்காததால், துறை ரீதியிலான முக்கியப் பணிகளைச் செய்வதிலும், நிர்வாகத்தைக் கவனிப்பதிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனருக்கு, அந்தத் துறைப் பணியே மலைபோல் இருக்கும் நிலையில், அவரிடம் பள்ளிக் கல்வித் துறையை கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்திருப்பதால், இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.


முந்தைய தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த பெருமாள் சாமி, தேர்தல் நெருக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்று, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனாலும், இன்னும் பள்ளிக் கல்வித் துறைக்கென தனி இயக்குனரை நியமிக்கவில்லை. பள்ளிக் கல்வித் துறை, அமைச்சகத்தின் பிரதானமான துறை. ஐந்து மாதங்களுக்கும் மேலாக, கூடுதல் பொறுப்பு நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்வுத் துறையில், போதுமான பணியாளர்கள் இல்லை. ஆனால், ஆண்டிற்கு 40க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிடும் பொறுப்பு, அத்துறைக்கு உள்ளது. இதனால், இருக்கின்ற ஊழியர்களை கசக்கிப் பிழிந்து, வேலைகளை முடிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் அத்துறையில் நிலவுகிறது. அதிலும், பொதுத் தேர்வு நெருங்கிவிட்டால், சனி, ஞாயிறு என விடுமுறையே இல்லாமல், ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இப்படி பணிப்பளு அதிகமாக இருப்பதால், இயக்குனர் வசுந்தரா தேவி, பெரும்பாலும் தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறை பூட்டியே கிடக்கிறது. இயக்குனரைப் பார்க்க வரும் ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

தேங்கிக் கிடக்கும் பணிகள்:


*சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைக்கும் பணியை, பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டும். இந்தப் பணிகளை முடித்து, தேர்வுத் துறையிடம், "புளூ பிரின்ட்' ஒப்படைத்தால் தான், அதற்கேற்ப பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறை வினாத்தாளை அச்சிடும் பணியை மேற்கொள்ளும்.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், இந்த ஆண்டு செய்முறைத் தேர்வைச் செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், "லேப்' அமைப்பதற்கு, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, செய்முறைத் தேர்வு நடைபெறும். முதல் முறையாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், செய்முறைத் தேர்வை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தால் தான், பொதுத் தேர்வின் போது செய்முறையை நன்றாகச் செய்ய முடியும். இதற்கு, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இருந்து, எந்தவித பதிலும் கிடையாது.

* செய்முறைத் தேர்வுக்கான பாடப் பகுதிகளும், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

* ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை விரைவாக நியமனம் செய்தால் தான், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி பெற வழி பிறக்கும். வழக்கு காரணமாக, நியமனம் செய்ய முடியவில்லை என்று, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

* ஜூன் மாதம் நடத்த வேண்டிய ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், இதுவரை நடத்தப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. பொது மாறுதல் கவுன்சிலிங்கை விரைந்து நடத்தி முடித்தால், புதிய பணியிடங்களுக்குச் சென்று, முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும். இப்படி, பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சமச்சீர் கல்வி பிரச்னையால், இரண்டு மாதங்களாக மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, மேலும் அவர்கள் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.சங்கரன் - 

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்