தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.9.11

சிறப்பாக பணியாற்றிய 364 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான வரும் ஐந்தாம் தேதி, சிறப்பாக பணியாற்றிய 364 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' சென்னையில் வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு, நாளை தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

சாதாரணமான ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, பின் ஜனாதிபதி அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். எனினும், ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அவரது பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தேசிய அளவில், "ஆசிரியர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேசிய அளவிலும், அந்தந்த மாநிலங்கள் அளவிலும் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகின்றனர். 

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, ராஷ்டிரபதிபவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, விருதுகளை வழங்குவார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி வழங்குவார். தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தமிழக அரசு சார்பில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'க்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், நேற்று அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட ஆசிரியர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதில் இருந்து 364 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, வரும் ஐந்தாம் தேதி சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். 5,000 ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. "விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு, நாளைக்குள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். விருதுக்குரியோர் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
 தேர்வு எப்படி நடக்கிறது
ஆசிரியரின் பணிக்காலம், பணியாற்றிய பள்ளிகளில் எல்லாம் அவர் பாடத்தில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம், பணிபுரியும் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள் துணையுடன் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சி, கல்வி மேம்பாட்டில் ஆசிரியரின் பங்கு, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த எடுத்த சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், விருதுக்குரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்