அரசுத்துறைகளில் செல்லாத திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டம், அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் செல்லுபடியாகிறது. இந்த முரண்பாடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பட்டதாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ அதற்குப் பிறகு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றால் செல்லும். ஆனால், பள்ளிப் படிப்பை முறையாக முடிக்காமல் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் எம்.ஏ., போன்ற பட்டங்களைப் பெறுவதை அடிப்படை பட்டப்படிப்பாகக் கருத முடியாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசுத்துறைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தில்: தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் என பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அவர்களில், உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு மூலம் பிரிவு அலுவலர் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 205-க்கும் மேற்பட்ட உதவிப்பிரிவு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் இருந்தாலும் அவர்களில் 40-க்கும் அதிகமானோர் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெற்றவர்கள். அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்தாலும், பதவி உயர்வுக்கு அவர்கள் பரிசீலிக்கப்படவில்லை. இது, தலைமைச் செயலக ஊழியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது கோபத்துக்கும், கொந்தளிப்புக்கும் காரணமாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைச் சுட்டுகிறார்கள்.
பணியாளர் தேர்வாணையத்தில்: பத்தாம் வகுப்புகூட படிக்காமல், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சார்புச் செயலாளராக பணியாற்றி வந்த இருவருக்கு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலையில் உள்ள இருவருக்கு அரசின் எந்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பதவி உயர்வு வழங்கியுள்ளது, சாதாரண நிலையில் உள்ள அரசு ஊழியர்களையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து, தலைமைச் செயலகத்தில் தட்டச்சர் என பதவியில் சேர்ந்து உதவிப் பிரிவு அலுவலர் நிலைக்கு உயர்ந்து, பிரிவு அலுவலர் ஆகி விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஊழியர்களுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் செல்லாது என்ற உத்தரவு பேரிடியாக இருந்தது. ஆனால், இந்த உத்தரவு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மட்டும் பின்பற்றப்படாமல் இருப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தன்னாட்சிபெற்ற அமைப்பு என்பதால் அரசின் உத்தரவு தேர்வாணையத்துக்குப் பொருந்தாதா என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்கள் எதிர்பார்ப்பு: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கியிருப்பதன் மூலம், அது செல்லுமா என்ற கேள்வியை போட்டித் தேர்வுகள் எழுதும் இளைஞர்கள் எழுப்பியுள்ளனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக