தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.10

மக்கள்தொகை முதல் கட்ட கணக்கெடுப்புக்கான காலவரையறை நீட்டிக்கப்படாது

தமிழகத்தில் மக்கள்தொகை முதல்கட்ட கணக்கெடுப்புக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூலை 15-ம் தேதி என்ற காலவரையறை நீட்டிக்கப்படமாட்டாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.   

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:   
தமிழகம் முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல்கட்ட பணிகள் ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 25 சதவிகிதம் வரை பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பணியை மேற்கொள்வது தொடர்பாக பெரிய அளவுக்கு புகார்கள் ஏதுமில்லை. திட்டமிட்டுள்ளபடி ஜூலை 15-ம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்படும். காலவரையறை நீட்டிக்கப்படமாட்டாது.   

ஜூலை 15-ம் தேதி என்ற காலவரையறையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை. மழையைக் காரணம் காட்ட முடியாது. ஏனெனில், மழைக் காலத்திலும் பணிகளில் போதிய முன்னேற்றம் காணப்படுகிறது. ஏற்கெனவே நாட்டிலுள்ள 25 மாநிலங்களில் இந்தப் பணி முடிக்கப்பட்டுவிட்டது.   

முதல்கட்டமாக, வீடுகள் மற்றும் அந்த வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2-ம் கட்டமாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முழு அளவிலான கணக்கெடுப்புப் பணிகள் நாடு முழுக்க ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. அப்போது வீடுகள் இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்போர், அரவானிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துக் குடிமக்கள் குறித்தும், அவர்களது வாழ்க்கை நிலைகள் குறித்தும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பின் தேசிய அளவில் அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெறும்.   

கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டியது மக்களது கடமையாகும். கணக்கெடுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அல்லது கணக்கெடுப்புப் பணியைச் சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையங்களில் தொடரப்படும் வழக்குகளோடு கூடுதலாக மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகம் சார்பில் திரைப்பட நடிகர்களின் குரல் மற்றும் நடிப்பில் விளம்பர ஒலி, ஒளி காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.   திரையரங்குகளில் இவற்றை திரையிடவும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும், தொலைத்தொடர்புத்துறை மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.    

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தை ஒதுக்கித்தருவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறையிலிருந்து சுற்றறிக்கை ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு நேரம் ஒதுக்கித்தரவில்லை, நேரம் போதவில்லை என்ற புகார்களுக்கே இடமில்லை.

கடலோர கிராமங்களில் ஜூலை 15-க்குப் பின் அடையாள அட்டை விநியோகம்:   
நாட்டிலுள்ள கடலோரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடலோரக் கிராமங்களில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த கணக்கெடுப்பும், புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 229 கடலோரக் கிராமங்களில் ஏறக்குறைய 8 லட்சம் பேரை புகைப்படம் எடுத்து, அவர்கள் குறித்த விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி  ஜூலை 15-ம் தேதிக்குப்பின் மேற்கொள்ளப்படும் என்றார் கோபாலகிருஷ்ணன்.    

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் ஆலோசனையும் நடத்தினார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்