தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.9.17

ஊதியக் குழு: ஐகோர்ட் கெடு; ஆஜரானார் தலைமை செயலர்


தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நேற்று ஆஜரானார்.

'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது. அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, நிறுத்தி வைக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை ஈடு செய்ய, சனிக்கிழமை விடுமுறை நாட்களில் பணிபுரிய வேண்டும்.

'சம்பளக் கமிஷன் பரிந்துரையை, செப்., 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்துவது குறித்து, அக்., 13க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' என, அரசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

தமிழகத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ,- ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர்.உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அடுத்து, செப்., 15ல் வேலை நிறுத்தத்தை கைவிட்ட அரசு ஊழியர்கள், அன்று மதியம், 2:00 மணிக்கு பணிக்குத் திரும்பினர்.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன், நேற்று இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது.
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆஜராயினர்.

சங்கங்கள் சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாத்: அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது சம்பளக் குழுவின் திருத்தப்பட்ட சம்பளத்தை, அமல்படுத்த வேண்டும்.
அதுவரை, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இதற்காகவே போராடினர்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், 3,800 பேரிடம், சம்பளத்தில்தலா, 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. அரசும், தன் பங்காக, 10 சதவீதம் செலுத்தியது. அவர்கள் ஓய்வு பெற்றும், பலன்களை வழங்கவில்லை. பிடித்தம் செய்த தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணத்தை வழங்காததால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன்: தற்போது, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, துறைகள் வாரியாக கருத்துக் கேட்பு நடக்கிறது. செப்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பொருளாதார சூழ்நிலையை கருதி, அதை நடைமுறைப்படுத்த, நான்கு முதல் ஐந்து மாதங்களாகும். அதுவரை, இடைக்கால நிவாரணம் குறித்து, உறுதியாக கூற முடியாது. இந்தியாவில், தமிழகத்தில் தான் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள். காலமுறை சம்பளத்தில் கொண்டுவர இயலாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை மேற்கு வங்கம், திரிபுரா தவிர, பிற மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன.

பிரசாத்: கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், அரசு காலம் தாழ்த்துகிறது. ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம்,50 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, உடனடியாக அமல் படுத்தப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது.

விஜய் நாராயணன்: எம்.எல்.ஏ.,க்கள் சம்பள உயர்வை, இவ்விவகாரத்துடன் ஒப்பிட தேவை இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டும், உறுதிமொழியை மீறி, 20 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர். பெரும்பாலான ஊழியர்கள், அரசுக்கு ஆதரவளித்தனர்.

ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழுவானது, நிபுணர்களிடம் கருத்துக் கோர வேண்டி உள்ளது. நவ., 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதிகள்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது. பிடித்து இருந்தால், அதை திருப்பி வழங்க வேண்டும். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை ஈடு செய்ய, வார விடுமுறையான சனிக்கிழமைகளில் பணிபுரிய வேண்டும். சம்பளக் கமிஷன் பரிந்துரையை, செப்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்துவது குறித்து, அக்., 13க்குள் அரசு முடிவை தெரிவிக்க வேண்டும்.

இதில், கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியத் திட்டம் தொடர்பான குழு, எப்போது அறிக்கைசமர்ப்பிக்கும் என்பதை, அரசு தெரிவிக்க வேண்டும்.

விசாரணை, அக்., 23க்கு ஒத்திவைக்கபடுகிறது. இவ்வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிப்பதா, இல்லையா என்பது குறித்து, இருதரப்பிலும் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்