தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.5.13

"ஒரே பணி - இருவேறு ஊதியம்" மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா?

ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாட்டை நீக்கக் கோரி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு வருகிற மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 6, 7, 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பின்னர் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே தற்போது 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இவர்களுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர். இதில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்றவர்கள். எனவே அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டுமென்று கடந்த 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இதற்காக கடந்த 2007ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தை தர்ணா, 2008ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு தர்ணா, 2010ல் சென்னை காயிதே மில்லத் மண்டபம் முன்பு அடையாள உண்ணாவிரதம், 2013 பிப்.26ல் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாலை நேர ஆர்ப்பாட்டம், 2013 ஏப்.17ல் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு பேக்ஸ் அனுப்பும் போராட்டம் என கடந்த 8 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் தங்கள் கோரிக்கைக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை என்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் இசக்கி யப்பன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை
:

கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் வைகை செல்வனை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்ட தாரி ஆசிரியர் களாக உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வருகிற மே 10ல் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கைக்கு முன்பு முதல்வருடன் விவாதித்து தீர்வு காண்பதாக கூறியுள்ளார்.

தொடக்க கல்வித் துறையில் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கும் போது அதில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அந்தந்த ஒன்றியங்களில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு கீழிறக்கம் செய்யப்படுகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் அது போன்ற வாய்ப்புகள் கிடையாது. எனவே உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் முடிவுறு பணி தொகுதி ஆகி விட்டது.

கடந்த காலங்களில் முடிவுறு பணி தொகுதி ஆகிவிட்ட இளநிலை ஆசிரியர்கள் அரசாணை எண்.669, நாள் 25.4.1979ன் படி இடைநிலை ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

மேல்நிலைக் கல்வி உருவாக்கப்பட்ட போது மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் அரசாணை எண்.720, நாள் 28.4.1981ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் பெற்று வந்த மேல்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் விகிதத்தில் முதல் நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களாக அரசாணை எண்.69, 29.7.2007ன் அடிப்படையில் தகுதி உயர்த்தப்பட்டனர்.

மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் அரசாணை எண்.187, பள்ளிக்கல்வி நாள் 4.10.2008ன் படி கணினி பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

எவ்வளவு செலவாகும்
?

பட்டதாரிகளாக உட்படுத்தக் கோரும் இடைநிலை ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் உள்ளனர். தேர்வு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,300 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.300 தர ஊதியம் அதிகமாக கிடைக்கும். அத்துடன் 3 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும்.

சிறப்பு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,500 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.100 தர ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் 3 சதவீதம் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாது இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்