இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அகிம்சையை கற்றுக்கொடுத்த, இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கபடும் காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உலகுக்கு தேவைப்படுவது, காந்தியடிகள் பின்பற்றிய "அகிம்சை' தான்.
மகாத்மா காந்தி, 1869 அக்., 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். 1883ல் தனது 13 வயதில் காந்தி, கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்தார். பள்ளிக்கல்வியை முடித்தபின், உயர்கல்விக்காக 1888ல் லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார்.
தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள்:
பின் 1893ல், வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது அங்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி மற்றும் இனப்பாகுபாடு அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியடிகளும் பலமுறை பாதிக்கப்பட்டார். அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினைத்து "சத்யாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் பின், இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு முன்வந்தது. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தியடிகள் 21 ஆண்டுகளுக்குப் பின், 1915ல் நாடு திரும்பினார்.
இந்திய சுதந்திர போராட்டம்:
இந்தியா ஆங்கியேர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நாடு முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட காந்தி காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 1920ல் காங்., கட்சியின் தலைவராகவும் இருந்தார். ரவிந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, ஜின்னா, வல்லபாய் படேல், அம்பேத்கார் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போரட்டத்தை நடத்தினார். நாடு முழுவதும் பயணம் செய்து மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதில் காந்தியின் பங்கு முக்கியமானது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். இறுதியில் 1947 ஆக., 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
இறுதி வரை போராட்டம்:
இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில் காந்தியோ இந்தியா - பாக்., பிரிவினையை கண்டு மனம் வருந்தினார். உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இறுதியில் 1948 ஜன., 30ம் தேதி, காந்தியடிகள் வழிபாடு முடிந்து வெளியே வந்த போது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது பிறந்த தினம், உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
வாய்மையே வெல்லும்:
மகாத்மா காந்தி ஒன்றும் வசீகரத்தோற்றம் உடையவரில்லை, கையில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தியதில்லை. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டு பயந்தது. இந்திய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு கீழ்படிந்தனர். ஏனெனில் அவரது நேர்மை மற்றும் துணிவு. இவர் நினைத்திருந்தால் செல்வந்தராகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அரை ஆடை அணிந்திருந்ததைப் பார்த்து, தானும் அரையாடை மனிதனாக மாறினார். இதுதான் இவரை மகாத்மாவாக மாற்றியது. "வாய்மையே வெல்லும்' என்ற வரிக்கு ஏற்ப கடைசி வரை, உண்மையாகவே வாழ்ந்தார். நாட்டு மக்களும் இதனை பின்பற்ற வேண்டும்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக