தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.5.20

கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் - தஇஆச கோரிக்கை.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்  சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் 1 முதல் 12 வகுப்புக்கள் வரை பயிலும் மாணவர்களின் கல்விச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 9 வகுப்புக்கள் வரை நடத்த வேண்டிய மூன்றாம் பருவத்தேர்வையும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையிலும், கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலையில் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை 12.05.2020 ல் வெளியிட்ட அரசாணையின் மூலம் தமிழக அரசு அமைத்தது.

இக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், UNICEF,  சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 29.05.2020 ல் வெளியிட்டுள்ள அரசாணையில் நிபுணர் குழுவில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நான்குபேரைக் கூடுதலாக தமிழக அரசு சேர்த்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது.

ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப
 வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத
 பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.

 தனியார் ,  சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அளிக்கும் அதிக முக்கியத்துவம அரசு பள்ளிகளுக்கு இல்லையா.

 அரசுப்பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் மூத்த கல்வியாளர்கள் என்று எவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காமல் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் இந்த அரசின் முடிவு பாரபட்சமானது.

மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதுவே நிபுணர் குழுவின் ஆலோசனைகள் உண்மையான பலனைத் தருவதாகவும், தமிழகத்தின் இன்றைய பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டங்களைத் தருவதாகவும், எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அமையும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

7.5.20

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் "ஓய்வு பெறும் வயது நீடிப்பு" அரசாணையை ரத்து செய்க.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளைகிறது எனவே ஆணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 58 லிருந்து 59 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசாணையை தமிழக அரசு அலுவலகங்களின் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், கல்லூரிகள் பொது நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஆனால் பல லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில்  குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார்  70,000  பேர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும் இன்னும் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருவதும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி எதிர்கால கனவுகளையும் சீர்குலைக்கும் விதமாக அமையும். 

ஏற்கனவே தமிழகத்தில் படித்துவிட்டு அரசுப் பணியை எதிர்நோக்கி வேலைவாய்ப்புகளில் பதிவு செய்திருக்கும் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி ஆகும்

மேலும் கடந்த 5 ,6 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் ஏதும் நடைபெறவில்லை அரசுப்பணியில் போதுமான அளவு நியமனங்கள் நடைபெறவில்லை மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இதனால் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தற்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு வயதை உயர்த்தி உள்ளது என்பதும் இந்த ஆண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுவோறுக்கு ஓய்வு காலப் பணப் பலன்களை 
 கொடுப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளாகவே தெரிகிறது. இதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவானது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் .

மேலும் அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசிடம் யாரும் கேட்கவில்லை எனவே தமிழக அரசு முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகும்.

 இந்த முடிவானது தற்போது பணியில் உள்ள பலரது பதவி உயர்வு வாய்ப்பை பாதிக்கும் செயலாகும் எனவே தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நலன் கருதி இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், ஓய்வூதிய வயது 58 லிருந்து 59 ஆக நீட்டிப்பு செய்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

28.4.20

அகவிலைப்படி உயர்வு ரத்து, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டதை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது

 தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 232 நிதி (படிகள்)துறை நாள் 27/04/2020 படி தமிழக அரசு அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 30/06/ 2021 வரை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது .அதேபோன்று அரசாணை எண் 48 (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை)  நாள் 27/04 /2020 ன்படி  அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெற்றுவந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டது .

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு மத்திய அரசு கடும் விலைவாசி புள்ளிகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும் இன்றைய நிலையில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அடுத்து 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல.

மேலும் அகவிலைப்படி அதாவது பஞ்சப்படி என்பது முதல் உலகப்போரில் 1917 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் போது அவர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாக்க முழக்கமிட்டு பெறப்பட்ட முதல் உரிமைப்போர் பின்பு

 இரண்டாம் உலகப்போரின் 1929 அனைத்து தொழிலாளர்களும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த பஞ்சபடியானது பஞ்சம் போக்க வழங்கப்பட்டது

 இதனை தொடர்ந்து 1944 ல் வரதாச்சாரியார் குழு ஒன்று அமைத்து பஞ்சப்படியுடன் உணவுப்படியும் சேர்த்து குறைந்த சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.

 இந்திய விடுதலைக்குப் பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஏறும் அல்லது இறங்கும் பஞ்சப் படியை கணக்கிட்டு 1960 ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கணக்கில் கொண்டு விலைவாசி உயர்வு 100 புள்ளிகள் என நிர்ணயம் செய்து ஆண்டிலிருந்து இன்று வரை இந்தப் படியனது வழங்கப்பட்டு வருகிறது .

இப்படி போராடிப் பெற்ற உரிமைகளை 18 மாதங்களுக்கு பஞ்சப்படி ரத்து என்ற அறிவிப்பானது கொரோனா தொற்று காலங்களில் மத்திய அரசானது தேவையற்ற தொற்றை எதிர்ப்பாக கொள்கிறது

 மத்திய அரசு பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச் செயலானது அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அடுத்த 18 மாதங்களில் விலைவாசி புள்ளியை 01/07 2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

 கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது ஒரு மாத காலத்தில் மத்திய மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக் கூடிய அளவிற்கு நிலைமை உருவாகி உள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் தன்மையின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.

 மேலும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவி இரண்டு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் அதை கட்டுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த 18 மாதங்களில் அகவிலைப்படி உயர்வை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது என்பது  கொரோனாவை காரணம் காட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

 மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக களத்தில் நிற்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவல்துறையினர் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ரத்து செய்து செயல் என்பது   மிகப் பெரிய கொடுமையாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பார்க்கப்படுகிறது நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன நாட்டின் பெரும் முதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வரிச்சலுகை பல லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதை போல தனது ஊழியர்கள் தலையில் கை வைப்ப து வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் .

எனவே தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகிவிற்றை நிறுத்திவைத்து வெளியிட்டுள்ள அரசாணையை யும் மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாநில மையம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

10.12.19

ஜனவரி 2020-இல் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்: பொதுச் செயலாளர் அ. சங்கர் அறிவிப்பு


தென்காசி மாவட்டத்தில் தஇஆச புதிய கிளை தொடக்கம்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தென்காசி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 08/12/ 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

தேர்தல் ஆணையராக மதுரை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநிலப் பொதுச்செயலாளர் அ. சங்கர் கலந்து கொண்டார்.

 கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

மாவட்ட தலைவராக செல்வசுந்தரராஜ், மாவட்டச் செயலாளராக கணேசன், மாவட்ட பொருளாளராக மதியழகன், அமைப்புச் செயலாளராக சுதாகர், தலைமையிடச் செயலாளராக நந்தகுமார், துணைத்தலைவர்களாக மனோகர் ராஜதுரை, பழனியம்மாள், இணைச்செயலாளர்களாக ஜாண்சன்  ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

முன்னதாக மாவட்டச் செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார். 

9.12.19

தஇஆச தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும்  தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் வைத்து  நடைபெற்றது.
                                                  
தேர்தல் ஆணையராக தஇஆச மதுரை மாவட்ட தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநில துணை பொதுச்செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் ரெ. ஹெர்பர்ட் ராஜா சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

பொதுச்செயலாளர் அ. சங்கர் அவர்கள் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் எதிர்கால திட்டம் பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதையும் விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார். 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

மாவட்ட தலைவராக ஞானதுரை, மாவட்டச் செயலாளராக செல்வின் ஜூலியஸ், மாவட்ட பொருளாளராக சரவணகுமார் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக உமாமகேஸ்வரி, அமைப்புச் செயலாளராக மணிமேகலை, தலைமையிடச் செயலாளராக சகிலா சலாமத், துணைத்தலைவர்களாக யோனா செல்வின், பிரேமா, இணைச்செயலாளர்களாக வசிகர் ஜெயக்குமார், அகிலா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . 

1. அரசு /அரசு உதவி பெறும் நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக 2006 முதல் உட்படுத்த வேண்டும். 

2. நான்கு ஆண்டு காலமாக அரசு, உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. உடனே இந்த ஆண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.                   

3. 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.          

4. 10, 11 ,12 ஆகிய அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் நலன் கருதி உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும். 

முன்னதாக மாவட்டச் செயலாளர் செல்வின் ஜுலியஸ் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஞானதுரை ஏற்புரை நிகழ்த்தினார்.  மாவட்ட பொருளாளர் சரவண குமார் நன்றி கூறினார். 

24.8.19

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவுகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  
தீர்மானம் எண் 1: 
தே.க.கொ வரைவையே நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசிற்குக் கண்டனம்

தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை மீது 15.08.2019 வரை கருத்துக் கேட்பு நடத்தியுள்ள மத்திய அரசு இதுவரை ஏற்பு செய்யப்பட்ட இறுதி அறிக்கையை வெளியிடாத நிலையில், தமிழக அரசு தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுக்கல்வியை பாதிக்கக்கூடிய, கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இலவச தமிழ்வழிக் கல்வியைப் பாதிக்கக்கூடிய வகையிலான தொடர் நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை கல்வி நிலையிலும், நிர்வாக நிலையிலும் பாதிக்கக்கூடிய அரசாணை (நிலை) எண் : 145(பள்ளிக்கல்வித்(தொக)3(2)துறை) நாள் : 20.08.2019 -ஜ உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 2: 
கருத்தரங்குகள் நடத்திய மாவட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 21.07.2019 தமிழ்நாடு மாநிலக்குழுவின் முடிவின்படி தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்திய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளுக்கு இம்மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3: 
STFI & AIFUCTO மதுரையில் மாநில மாநாடு

தேசியக்கல்விக்கொள்கை – 2019 தொடர்பாக AIFUCTO(All India Federation of University & College teachers organisations) அமைப்புடன் இணைந்து STFI & AIFUCTO சார்பில்  செப்டம்பர் - 2019-ல் மதுரையில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை மிகச்சிறப்பாக நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 4: 
பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக் கட்டணம்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறும் பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களிடம் பிரதிநிதிக் கட்டணமாக தலா ரூ500-(ரூபாய் ஐநூறு மட்டும்) பெறுவது என இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 5: 
ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இரவிச்சந்திரன் அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்திடக்கோரியும் இந்தியப்பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 09.09.2019 அன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

கூட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் செ.அப்பாத்துரை, பொதுச்செயலாளர் மற்றும் STFI அகில இந்திய மத்திய குழு உறுப்பினர் அ. சங்கர், மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில தனிக்கையாளர் திருமதி அ. ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுக்குழு முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. செ. அப்பாதுரை தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திருமதி ஞானம்மாள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார்.

இதழ் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் அவர்கள் சமர்ப்பித்தார்.

வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு.க.சு.பிரகாஷ் அவர்கள்  சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.

கூட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்மா அவர்களும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அவர்களும் மேனாள் பொதுச்செயலாளர் இயக்கத்தின் நிறுவனருமான தோழர் ஆ.சுப்பிரமணியன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

பொதுக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.                        

1. அரசு / அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.  

2. இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்       

3 . அரசு  உயர்நிலைப்பள்ளி பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

4. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 ல் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள சிக்கல் நிறைந்த இந்த தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.                 

5. மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மூடப்பட்ட 46 ஆரம்பப் பள்ளிகளை நூலகமாக மாற்றியதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.

6. அரசாணை 145இல் உள்ள பள்ளி இணைப்பு என்ற முறையை கைவிட வேண்டும் .

7. கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி/ இடைநிலைக்கல்வி) பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது. வருகிற செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

21.8.19

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

நாள்: 23/08/2019,  வெள்ளிக்கிழமை.

இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  அலுவலகம், திண்டுக்கல் (போலீஸ் ஜிம் அருகில், மெங்கிள்ஸ் ரோடு)  

தலைமை:  திரு. C. அப்பாத்துரை, மாநிலத் தலைவர்

முன்னிலை: திரு. S. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.

வரவேற்புரை: திருமதி  ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.

வேலை அறிக்கை: திரு. அ. சங்கர், பொதுச்செயலாளர்.

வரவு செலவு அறிக்கை: திரு. க. சு .பிரகாசம், மாநில பொருளாளர்.

இதழ் அறிக்கை: திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச்செயலாளர்.

நன்றியுரை: திரு. வெங்கட்ராமன், அமைப்புச் செயலாளர்.

அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலப்  பொறுப்பாளர்கள், இணை /துணை பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்

அ.சங்கர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்